SELANGOR

2025ஆம் ஆண்டிற்குள் 30,000 வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு

ஷா ஆலம், ஜூலை 28- ரூமா இடாமான் திட்டத்தின் வாயிலாக வரும்
20025ஆம் ஆண்டிற்குள் 30,000 வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை
அடைவதற்குரிய சரியான தடத்தில் மாநில அரசு பயணிக்கிறது.

இதுவரை 2,509 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உரிமையாளர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ரூமா இடாமான் திட்டத்தின் கீழ் 6,000
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன அல்லது நிர்மாணிப்பில் உள்ளன.
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளின் கட்டுமானம் தொடர்பில் திட்டமிடல்
அனுமதிப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர்
தெரிவித்தார்.

இந்த ஆகக் கடைசி நிலவரங்களின் படி வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 20,000
முதல் 30,000 வீடுகள் வரை நிர்மாணிக்கும் இலக்கை அடைய முடியும்
என நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள சஹாயா ஆலமில் ரூமா இடாமான் சஹாயா திட்டத்திற்கான
அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது மக்கள் முதலாவது வீட்டைப் பெறுவதற்கு ஏதுவாக வீடமைப்பு
கடன் உத்தராவதத் திட்டத்தின் கீழ் (எஸ்.ஜே.கே.பி.) 120 விழுக்காடு வரை
கடனுதவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ள ஒற்றுமை
அரசாங்கத்தின் நடவடிக்கையை தாம் பாராட்டுவதாகவும் அவர்
சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள வீடுகளுக்கான கடனுதவி 120 விழுக்காடாக
அதிகரிக்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
நேற்று வெளியிட்ட அறிவிப்பு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ரூமா இடாமான் திட்டமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நிதி
பிரச்சனை காரணமாக வீடு வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கும்
தரப்பினருக்கு இந்த திட்டம் பெரிதும் பயனளிக்கும் என்று அமிருடின்
சொன்னார்.


Pengarang :