SELANGOR

மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் பாப்பாராய்டு தீவிரம்

பந்திங், ஜூலை 31- பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும்
பணியில் பந்திங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்
வீ.பாப்பாராய்டு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தனது பிரசார நடவடிக்கையை காலை 7.30 மணிக்கே தொடங்கும் அவர்
சந்தைகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் என பொது மக்கள் ஒன்று
கூடும் பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டி
வருகிறார்.

நேற்று ஜென்ஜாரோம், ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷம்
விழாவில் பாப்பாராய்டு கலந்து கொண்டார். பூரண மரியாதையுடன் அவர்
வரவேற்ற ஆலய நிர்வாகத்தினர் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு
செய்தனர்.

பின்னர், தேர்தல் செயல்குழு உறுப்பினர்களுடன் கம்போங் சுங்கை சீடு
வட்டாரத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜென்ஜாரோமில் நேற்றிரவு
8.00 மணிக்கு நடைபெற்ற பந்திங் தொகுதிக்கான முதன்மை நடவடிக்கை
அறை- 2 திறப்பு விழாவிலும் பாப்பாராய்டு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பந்திங் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
லாவ் வேங் சான், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஹராப்பான்
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பந்திங் தொகுதியை தமக்கு விட்டுக் கொடுத்து பக்கத்தான் ஹராப்பான்
வெற்றிக்காக முழுமூச்சாகப் பாடுபடும் லாவ் வேங் சானுக்கு தாம் நன்றி
தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் பந்திங் தொகுதி மக்கள்
குறிப்பாக ஜென்ஜாராம் குடியிருப்பாளர்கள் தமக்கு வழங்கி வரும் ஆதரவு
கண்டு தாம் மனம் நெகிழ்ந்து போனதாக அவர் தெரிவித்தார்.

இன்று காலை தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் லாவ் வேங் சான்
மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களுடன் பெக்கான் பந்திங்கில்
பொது மக்களைச் சந்தித்து வாக்குகளைத் திரட்டினார்.


Pengarang :