SELANGOR

சிலாங்கூர், பினாங்கு, நெகிரியில் பெரிக்கத்தான் வென்றால் பொருளாதாரம் நலிவடையும்

ஷா ஆலம், ஜூலை 31- சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு
ஆகிய மாநிலங்களில் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் அந்த
மூன்று மாநிலங்களிலும் பொருளாதாரம் பெரிதும் நலிவடையும் என
பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு,
அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஆண்டு வருமான கணிப்பு ஆகியவற்றின்
அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுவதாக அந்நிபுணர்களை
மேற்கோள் காட்டி ஃப்ரி மலேசியா டுடே இணைய ஏடு செய்தி
வெளியிட்டுள்ளது.

இந்த மூன்று மாநில அரசு நிர்வாகம் புதிய கட்சியிடம் மாறும்போது
அந்நிய முதலீட்டுச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மலேசிய
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெப்ரி
வில்லியம்ஸ் கூறினார்.

எனினும், இந்த மூன்று மாநிலங்களையும் பக்கத்தான் ஹராப்பான் மற்றும்
பாரிசான் நேஷனல் கூட்டணி தக்க வைத்துக் கொள்ளும் எனத் தாம்
நம்புவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பக்கத்தான் ஆட்சி செய்து எதிர்வரும்
சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் கடந்த 2021ஆம் ஆண்டு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.29 விழுக்காட்டு பங்களிப்பை
வழங்கின. அதே வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வசமுள்ள கெடா,
கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் 10.88 விழுக்காட்டு பங்களிப்பை
மட்டுமே வழங்கின.

கடந்த 2021ஆம் ஆண்டில் 24.8 விழுக்காடாக இருந்த மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு கடந்தாண்டு 25.5 விழுக்காடாக
உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளி விபரத்துறையின் தரவுகள் கூறுகின்றன.


Pengarang :