SELANGOR

பள்ளிவாசலில் அரசியல் உரையா? ஜாய்ஸ் விசாரணைக்கு உட்படத் தயார்- ஃபாஹ்மி ஃபாட்சில் கூறுகிறார்

புத்ரா ஜெயா, ஆக 1- ரவாங்கிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தாம் அரசியல்
உரையாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சிலாங்கூர்
இஸ்லாமிய இலாகா (ஜாய்ஸ்) விசாரணைக்கு அழைத்தால்
அவ்விலாகாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக உள்ளதாக
தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹமி ஃபாட்சில்
கூறினார்.

அவ்வாறு செய்ய பணிக்கப்பட்டால் அதற்கு உடன்பட நான் தயாராக
உள்ளேன் என்று பொதுச்சேவைத் துறை தினத்தை முன்னிட்டு இன்று
நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.

கம்போங் மிலாயு ஸ்ரீ குண்டாங் நுருள் யாக்கின் பள்ளிவாசலில் கடந்த
ஞாயிறன்று உரை நிகழ்த்த்திய போது அரசியல் விவகாரங்களை
தொட்டதாகக் கூறும் தலைப்புடன் ஃபாஹ்மியின் படத்தை ஊடகங்கள்
வெளியிட்டிருந்தன.

இவ்விவகாரம் தொடர்பில் ஜாய்ஸ் நேற்று புகாரைப் பெற்றிருந்ததாகவும்
இது குறித்து விளக்கம் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிவாசலின்
பராமரிப்பாளர் அழைக்கப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் கூறின.

இச்சம்பவம் குறித்து டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் விளக்கமளித்த
ஃபாஹ்மி, குட் வைப்ஸ் பெஸ்டிவல் விழா மற்றும் 1975 எனும் பிரிட்டிஷ்
ராக் இசைக்குழுவுக்கு மலேசியா விதித்துள்ள தடை குறித்து விளக்கம்
பெறுவதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் தம்மை அழைத்திருந்ததாக
கூறியிருந்தார்.

இச்சந்திப்பின் போது அரசியல் குறித்தோ விரைவில் நடைபெறவிருக்கும்
மாநிலத் தேர்தல் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர்
தெளிவுபடுத்தியிருந்தார்.


Pengarang :