NATIONAL

மாநிலத் தேர்தலை முன்னிட்டு வடக்கு-தெற்கு விரைவுச் சாலையை (பிளாஸ்) 1.9 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10: மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு இந்த சனிக்கிழமையன்று வடக்கு-தெற்கு விரைவுச்சாலையை (பிளாஸ்) 1.9 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தங்கள்  சொந்த கிராமங்களுக்கு அல்லது வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள் வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிட நினைவூட்டப் படுகின்றனர்.

சாதாரண நாட்களை விட ஆகஸ்ட் 11 முதல் 12 வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அதிக நேரம் பயணிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப் படுவதாகப் பிளாஸ் மூத்தப் பொது மேலாளர் முகமட் யூசுப் அப்துல் அஜிஸ் கூறினார்.

“இருப்பினும், பொது மக்கள் மிகவும் வசதியான பயணத்தை மேற்கொள்ள உதவுவதற்காகப், செயல்பாட்டு நிர்வாகத்தின் அம்சங்களையும், சுங்கச்சாவடிகளின் ஓய்வு இடங்களையும் நெடுஞ்சாலை வசதிகளையும் உள்ளடக்கிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 முதல் 13 வரை விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றுவது போன்ற அவசரப் பணிகளைத் தவிர , நெடுஞ்சாலையின் பராமரிப்பு, மேம்படுத்துதல் அல்லது கட்டுமானப் பணிகளைப் பிளாஸ் தற்காலிகமாக நிறுத்துகிறது.

மேலும், நெடுஞ்சாலையின் ஓய்வு இடங்களில் உள்ள கழிப்பறைகள், சுராவ்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பக்கவாட்டு நிறுத்தங்கள் போன்ற அனைத்து பொது வசதிகளும் 24 மணி நேரமும் செயல்படுவதைப் பிளாஸ் உறுதி செய்யும்.

“நெடுஞ்சாலைப் பயனர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு இடங்களில் வாகங்களை நிறுத்தி உணவு மற்றும் பானங்களை அருந்திவிட்டு பயணத்தை மீண்டும் தொடர ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பிளாஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் அல்லது @PLUStrafik, Chatbot PUTRI என்ற ட்விட்டர் கணக்லைப் பின்தொடர்வதன் மூலம் போக்குவரத்துத் தகவலைப் பெறலாம். அதுமட்டுமில்லாமல், மேலும், தகவல்களுக்கு 1800-88-0000 என்ற “PLUSLine“ லைனையும் தொடர்பு கொள்ளலாம்.

– பெர்னாமா


Pengarang :