விமான விபத்தில் சிக்கியது நானா? முன்னாள் அமைச்சரின் மகன் மறுப்பு

கோலாலம்பூர், ஆக 18-  ஷா ஆலம், பண்டார் எல்மினா அருகே கத்ரி நெடுஞ்சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானவர்களில் தாமும் ஒருவர் எனக் கூறப்படுவதை  மறைந்த அமைச்சர் டான்ஸ்ரீ ஜமாலுதீன் ஜார்ஜிஸின் மகன் இக்வான் ஹபீஸ் ஜமாலுதீன் மறுத்துள்ளார்.

அந்த இலகு ரக விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் தனது பெரும் இருப்பதாக பிரதான ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல் உண்மையற்றது என்பதோடு தவறானது ஆகும்  என்று  பெர்னாமா வுக்கு வழங்கிய  சுருக்கமான அறிக்கையில் 36 வயதான இக்வான் கூறினார்.

சில பொறுப்பற்ற ஊடகவியலாளர்கள் தகவல்களைச் சரிபார்க்காமல் செய்திகளை வெளியிட்டு என் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது குறித்து  நான் வருந்துகிறேன் என்றார் அவர்.

இந்த பொய்யான செய்தி பரப்புவதை பொது மக்கள் நிறுத்த  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

இந்த  விபத்தில் கொல்லப்பட்ட 10 பேரில் பகாங் உள்ளாட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்ப  ஆட்சிக் குழு உறுப்பினரும்  பெலாங்கி  சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருணும் ஒருவர் என போலீசார் கூறினர்.

 

.


Pengarang :