விமான விபத்து- பூர்வாங்க விசாரணை அறிக்கை 30 நாட்களில் பூர்த்தியாகும்

புத்ரா ஜெயா, ஆக 19- ஷா ஆலம், பண்டார் எல்மினாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கை விபத்து நடந்த 30 நாட்களுக்குள் பூர்த்தியாகும்.

அனைத்துலக வான் போக்குவரத்து நிறுவனத்தின் விமான விபத்து மற்றும் சம்பவம் மீதான இணைப்பு 13இன் கீழ் விமான விபத்து விசாரணை மையம் தனது தொழில்நட்ப விசாரணையைத் தொடக்கி விட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.

உயிர்களைக் காப்பதற்கு ஏதுவாக விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவது, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதிருப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

யார் மீதும் குற்றஞ்சாட்டுவதோ பொறுப்பை சுமத்துவதோ இந்த விசாரணையின் நோக்கம் அல்ல என்றும் அது தெளிவுபடுத்தியது.

ஆகவே, இந்த விபத்து தொடர்பான காணொளிகள் அல்லது புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் விசாரணைக்கு உதவுவதற்கு ஏதுவாக அதனை விமான விபத்து விசாரணை மையத்திடம் சமர்ப்பிக்கும்படி அமைச்சு கேட்டுக் கொண்டது.

இந்த விபத்து நிகழ்ந்த போது அருகில் இருந்த பொது மக்கள் இந்த விசாரணை மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களைத் தந்து உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே சமயம், அந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சித்தரிக்கும் படங்கள் அல்லது காணொளியை பகிர வேண்டாம் எனவும் அமைச்ச வலியுறுத்தியது.


Pengarang :