மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவேன்- ஆட்சிக்குழுவில் இடம் பெற்ற பாரிசான் பிரதிநிதி கூறுகிறார்

கிள்ளான், ஆக 22- பதினைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்
மாநில ஆட்சிக்குழுவில் மீண்டும் இடம் பிடித்தது குறித்து தாம் பெருமிதம்
கொள்வதாக பாரிசான் நேஷனல் பிரதிநிதியான டத்தோ ரிஸாம்
இஸ்மாயில் கூறினார்.
சிலாங்கூர் மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்
அமைச்சரின் முன்னாள் அரசியல் செயலாளர் என்ற முறையில்
தமக்குள்ள அனுபவத்தைக் கொண்டு மாநில அரசு நிர்வாகத்தின்
வளர்ச்சிக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்கவுள்ளதாக அவர்
சொன்னார்.
தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்
ஆட்சிக்குழுவில் நான் இடம் பெற்றது மாநில அரசை மேலும்
ஆக்ககரமான முறையில் நடத்துவதற்கு நிச்சயம் துணை புரியும் என்று
சிலாங்கூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர்
குறிப்பட்டார்.
சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினரான ரிஸாம், கடந்த 2018ஆம்
ஆண்டு தொடங்கி சட்டமன்றம் கலைக்கப்படும் வரை மாநிலத்தின்
எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.
அக்காலக்கட்டத்தில் முதலீடு, வர்த்தகம் தொழிலியல் அமைச்சர்
டத்தோஸ்ரீ ஜப்ருள் அப்துல் அஜிசின் அரசியல் செயலாளராகவும் அவர்
பணியாற்றினார்.
இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 56 இடங்களைக்
கொண்டு மாநில சட்டமன்றத்தில் 34 இடங்களைப் பெற்று பக்கத்தான்
ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

Pengarang :