லைசென்ஸ் இன்றி செயல்பட்ட கோழி பதனீட்டுத் தொழிற்சாலையை மூட உத்தரவு

ஷா ஆலம், ஆக 30- லைசென்ஸ் இன்றி செயல்பட்டது மற்றும் சுற்றுப் புறத் தூய்மையைப் பராமரிக்கத் தவறியது ஆகிய காரணங்களால் ரவாங், ஜாலான் சுங்கை பாக்காவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு அந்த தொழிற்சாலையை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இந்த தொழிற்சாலைக்கு எதிராக இதே குற்றத்தின் பேரில் ஏற்கனவே இரு முறை நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அந்த உரிமையாளர் தன்மூப்பாக தொடர்ந்து வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக அது குறிப்பிட்டது.

இந்த கோழி பதனீட்டு தொழிற்சாலையின் உரிமையாளருக்கு ஏற்கனவே தற்காலிக லைசென்ஸ் வழங்கப்பட்டிருந்தது. எனினும், சுற்றுச்சூழல் துறையின் தர நிர்ணய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் இவ்வாண்டு பிப்ரவரி 8ஆம் தேதி அத்தொழிற்சாலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

லைசென்ஸ் ரத்து தொடர்பான கடிதம் அத்தொழிற்சாலை உரிமையாளருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி வழங்கப்பட்டது. கடிதம் பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும்படியும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தொழிற்சாலைக்கு எதிராக நான்கு குற்றப்பதிவுகளும் வர்த்தகத்தை நிறுத்தக் கோரும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அத்தொழிற்சாலை தொடர்ந்து செயல்படாமலிருப்பதை உறுதி செய்ய மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது என்று நகராண்மைக் கழகம் கூறியது.

 


Pengarang :