NATIONAL

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் அமைச்சர் சிவகுமார்! இந்திய வர்த்தக சங்கங்கள் புகழாரம்

கோலாலம்பூர் செப் 5-
முடிதிருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள்
மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இந்திய
பாரம்பரிய தொழில் துறைகள் அந்நிய
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி
கொள்ள அனுமதி பெற்று தந்த மனிதவள
அமைச்சர் வ. சிவகுமாருக்கு இந்திய வர்த்தக
சங்கங்கள் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொண்டன.

2009 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை இந்த மூன்று
துறைகளும் அந்நிய தொழிலாளர்களை
வேலைக்கு அமர்த்தி கொள்ள வாய்ப்பு
மறுக்கப்பட்டது.

இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை
அரசாங்கத்தில் மனிதவள அமைச்சராக பதவி
ஏற்றுக் கொண்ட அமைச்சர் சிவகுமார்
இதற்கு தீர்வு காண கடுமையான
முயற்சிகளை மேற்கொண்டார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின்
நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வாணிப
வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ
சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன்
பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியை
பெற்றார்.

பின்னர் பிரதமரின் கவனத்திற்கு இந்த
விவகாரத்தை கொண்டு சென்று இன்று நல்ல
முறையில் மனிதவள அமைச்சர் சிவகுமார்
தீர்வு கண்டிருப்பது பாராட்டுக்குரியது என்று
இந்திய வர்த்தக சங்கங்கள் தெரிவித்தன.

மலேசிய இந்தியர் தொழில் துறை
சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.
கோபாலகிருஷ்ணன், மலேசிய இந்தியர்
பொற்கொல்லர் நகை கடை சங்கத்தின்
தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல்,
மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர்
சங்கத்தின் தலைவர் டாக்டர் சுதந்திரம்,
மலேசிய டெக்ஸ்டைல்ஸ் சங்கத்தின் துணைத்
தலைவர் ரவிச்சந்திரன், டின் ஜூவல்லர்ஸ்
உரிமையாளர் டத்தோ ஜீராவூடின், லேபோ
அம்பாங் இந்திய பாரம்பரிய வர்த்தக
சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர்
கு.செல்வராஜ் உட்பட பலரும் மனித வள
அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத்
தெரிவித்துக் கொண்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு எல்லாம்
விடிவுகாலம் பிறந்துள்ளது பெரும்
மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர்கள்
தெரிவித்தனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அவர்களுக்கும் இந்த வேளையில் மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


Pengarang :