NATIONAL

மாடுகள் மற்றும் எருமைகளை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடை நீக்கம்

புத்ராஜெயா, செப் 6 – ஆஸ்திரேலியாவில் இருந்து மாடுகள் மற்றும் எருமைகளை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை மலேசியா உடனடியாக நீக்கியுள்ளதாக கால்நடை மருத்துவ சேவைகள் துறை (டிவிஎஸ்) தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவ சேவை துறை உடன் இரண்டு தொழில்நுட்ப கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், ஆஸ்திரேலியாவின் விவசாயம், மீன்வளம் மற்றும் வனவியல் துறையால் பகிர்ந்து கொள்ளப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

“இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான செயல்முறைக்கு உதவுவதில் ஆஸ்திரேலியாவின் விவசாயம், மீன்வளம் மற்றும் வனவியல் துறை வெளிப்படையாக இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்று கால்நடை மருத்துவ சேவை துறை கூறியது. இந்த முடிவு தொழில்துறையினர் மற்றும் மலேசியக் குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகளில் கட்டி தோல் நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியா ஆகஸ்ட் 4 அன்று தற்காலிக இறக்குமதித் தடையை விதித்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து உயிருள்ள மாடு மற்றும் எருமைகளை இறக்குமதி செய்பவர்கள், அனுமதி கோரும் முன், சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து இருந்து இறக்குமதி விண்ணப்பக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

“இறக்குமதி செய்யப்பட்ட பின் கால்நடைகள் ஒரு முழுமையான சோதனை செயல்முறைக்கு உட்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, உயிருள்ள விலங்குகளின் அனைத்து இறக்குமதிகளும் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை கால்நடை மருத்துவ சேவை துறை வலியுறுத்தியுள்ளது“.

– பெர்னாமா


Pengarang :