NATIONAL

முகநூலில் சிலாங்கூர் சுல்தானை அவமதித்த ஆடவருக்கு 6 மாதச் சிறை, வெ.10,000 அபராதம்

கோலாலம்பூர், செப் 6- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை நிந்திக்கும்
வகையில் கருத்துகளைப் பதிவேற்றம் செய்தது மற்றும் முகநூல் கடவுச்
சொல்லை வழங்கத் தவறியது ஆகிய குற்றங்களுக்காக வேலையில்லா நபர்
ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாதச் சிறைத்தண்டனையும்
10,000 வெள்ளி அபராதமும் விதித்தது.

முகமது அஸ்லான் இப்ராஹிம் (வயது 47) என்ற அந்த நபர் இன்று தொடங்கி
தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதோடு அபராதத் தொகையைச்
செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க
வேண்டும் என நீதிபதி என். பிரெஸிலா ஹேமாமலினி உத்தரவிட்டார்.

கருப்பு நிற ஜேக்கெட்டும் தலையில் குல்லாவும் அணிந்திருந்த முகமது
அஸ்லான் வழக்கு தொடங்குவதற்கு முன் பொது மக்களுக்கான இருக்கையில்
அமர்ந்தவாறு திருக்குரான் வாசகங்களை உச்சரித்தவண்ணம் இருந்தார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி இமான் முஸ்தாபின் என்ற தனது முகநூலில் பிறரின்
மனதை நோக்கடிக்கும் நோக்கில் சுல்தானுக்கு எதிராக நிந்தனை வாசகங்களை
பதிவேற்றம் செய்ததாக முகமது அஸ்லான் மீது முதலாவது குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டிருந்தது. இந்தப் பதிவு கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதி காலை 11.37
மணியளவில் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் கவனத்திற்கு
வந்தது.

கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி காலை 11.25 மணியளவில் டாங்கி வாங்கி
போலீஸ் நிலையத்தின் லாக்கப்பில் தனது முகநூலில் உள்ள இமான்
முஸ்தாகின் என்ற பக்கத்தின் கடவுச் சொல்லை போலீஸ் அதிகாரியிடம்
தெரிவிக்கத் தவறியதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டிருந்தது.


Pengarang :