SELANGOR

வேலை வாய்ப்பு, மருத்துவ பரிசோதனையை உள்ளடக்கிய ‘ஜெலாஜா மடாணி‘ நிகழ்வு- செந்தோசா தொகுதியில் நடைபெறும்

கிள்ளான், செப் 7- மனித வள அமைச்சின் ஆதரவுடன் செந்தோசா
சட்டமன்றத் தொகுதி ‘ஜெலாஜா மடாணி‘ எனும் நிகழ்வை கிள்ளான்,
தாமான் செந்தோசா எம்.பி.கே. மண்டபத்தில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி
வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளது.

காலை 9.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த
நிகழ்வில் வேலை வாய்ப்புச் சந்தை, இலவச மருத்துவப் பரிசோதனை,
மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றப் பிரிவின் கடனுதவி மற்றும்
உதவித் திட்டங்கள், மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த
விளக்களிப்பு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும் என்று செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இது தவிர, எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனத்தின் உதவித் திட்டங்கள் மற்றும்
தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், பி.டி.பி.கே. எனப்படும் திறன்
மேம்பாட்டு நிதிக் கழகத்தின் திறன் பயிற்சிக் கடனுதவித் திட்டங்கள்
குறித்தும் இந்நிகழ்வில் உரிய விளக்கங்கள் வழங்கப்படும். அதே சமயம்
மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விளையாட்டு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

மக்களின் மேம்பாட்டிற்காக செந்தோசா தொகுதியில்
அமல்படுத்தப்படவிருக்கும் ஐந்து உறுதி மொழிகளை மாநிலத் தேர்தலின்
போது நான் முன்வைத்திருந்தேன். அந்த உறுதி மொழிகளில் ஒன்றான
பி40 தரப்பினர் மத்தியில் ஏழ்மை ஒழிப்பை மையமாக கொண்டு இந்த
நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் விளக்கினார்.

பொது மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய
இந்த நிகழ்வில் செந்தோசா தொகுதி மக்கள் மட்டுமின்றி சிலாங்கூரிலுள்ள
அனைவரும் கலந்து பயன்பெறும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :