ANTARABANGSANATIONAL

மொரோக்கோ பூகம்பம்- உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார்

கோலாலம்பூர், செப் 10- கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மொரோக்கோ நாட்டிற்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் அந்நாட்டின் சமீபத்திய நிலவரங்களை அறிந்து கொள்வதற்கும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் மொரோக்கோ வெளியுறவு அமைச்சர் நஸீர் பௌரித்தாவுடன் விரைவில் தொடர்பு கொள்ளவிருக்கிறார்.

அந்நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக மொரோக்கோவில் உள்ள மலேசியத் தூதர் டத்தோ அஸ்தானா அப்துல் அஜிசை ஜம்ரி தொடர்பு கொண்டதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) இன்று அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த இயற்கைப் பேரிடரில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என்பதோடு தாங்கள் தொடர்பு கொண்ட அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் என்னிடம் தெரிவித்தார் என ஜம்ரி கூறினார்.

இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபத்தையும் இரங்கலையும் ஜம்ரி தெரிவித்துக் கொண்டார்.

மொரோக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என்று விஸ்மா புத்ரா நேற்று கூறியிருந்தது.

இந்த பூகம்பத்தில் சிக்கிய பலர் இன்னும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள காரணத்தால் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என அஞ்சப்படும் நிலையில் நிலைமையை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாக ராபாட் நகரிலுள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்திருந்தது.

மெரோக்கோவில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் உள்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கும்படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.


Pengarang :