NATIONAL

லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

கோலாலம்பூர், செப் 25.: லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்ட இருவரில், முன்னாள் மூத்த அமைச்சரின் அரசியல் செயலாளரும் அடங்குவார்.

அமைச்சகம் ஒன்று சம்பந்தப்பட்ட சுமார் RM80 மில்லியன் மதிப்புள்ள புத்தக அச்சிடும் திட்டத்திற்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஒப்புதல் அளித்ததற்கு ஈடாக இந்த ஊழல் நடந்துள்ளது.

“முதல் சந்தேக நபர் (20 வயதுக்கு மேற்பட்டவர் ) முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவருக்கு முன்னாள் அரசியல் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இரண்டாவது சந்தேக நபர் 50 வயதுக்கு உட்பட்ட நிறுவன உரிமையாளர் ஆவார்.

இரவு 11 மணியளவில் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் சாட்சியளிக்க வந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், எஸ்பிஆர்எம் அவர்களின் விளக்கமறியலில் விண்ணப்பித்ததை அடுத்து, எதிர்வரும் செவ்வாய் (செப்டம்பர் 26) வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய துணைத் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்) டத்தோஸ்ரீ அகமட் குசைரி யஹாயாவைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்து, எஸ்பிஆர்எம் சட்டம் 2009ன் பிரிவு 16(ஏ)(பி)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :