ANTARABANGSA

சரவா மாநிலத்தில் புகைப் மூட்டம்- காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கூச்சிங், செப் 27- சரவா மாநிலத்தின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளிலும்
புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள இரண்டு நிலையங்களில்
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ள நிலையில் இதர
பத்து நிலையங்களில் காற்றின் மாசுக் குறியீடு மிதமான அளவில்
உள்ளது.

செரியானில் நேற்று மாலை 4.00 மணியளவில் 116 ஆக இருந்த காற்றின்
தரக் குறியீடு (ஐ.பி.யு.) இரவு 7.00 மணியளவில் 109ஆகக் குறைந்ததாக
மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை நிலையத்தின் அகப்பக்கம்
கூறியது.

செரியான் நிலையத்தில் இரவு 8.00 மணி நிலவரப்படி ஐ.பி.யு. 99 ஆகவும்
இன்று காலை 11.00 மணியளவில் 98 ஆகவும் பதிவானதாக அது
தெரிவித்தது.

ஸ்ரீ அமான் நிலையத்திலும் ஐ.பி.யு. ஆரோக்கியமற்ற நிலையில்
காணப்படுகிறது. இன்று காலை 7.00 மணியளவில் 125 ஆக இருந்த
காற்றுத் தரக் குறியீடு காலை 11.00 மணியளவில் 151ஆக உயர்வு கண்டது.

கூச்சிங் நிலையத்தில் நேற்று மதியம் 12.00 மணி தொடங்கி காற்றின் தரம்
மிதான அளவில் 70 இருந்து வந்த வேளையில் இன்று காலை 11.00
மணியளவில் அதன் அளவு 88ஆக ஏற்றம் கண்டது.

கூச்சிங் மாநகரில் இன்று காலை காணப்பட்ட புகை மூட்டம் மதியம்
வரை தொடர்ந்தது.

காற்று மாசு குறியீட்டு மேலாண்மை முறையின் படி 0 முதல் 50
வரையிலான ஐ.பி.யு. அளவு சிறப்பானதாகவும் 51 முதல் 100 வரையிலான
அளவு மிதமானதாகவும் 101 முதல் 200 வரையிலான அளவு

ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300 மற்றும் அதற்கும் மேற்பட்ட
அளவு ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :