NATIONAL

சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு ஐந்து முக்கிய தொழில்களை இலக்காகக் கொண்டுள்ளது

கோலாலம்பூர், செப் 27: சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (SIBS) 2023 RM1.5 பில்லியன் விற்பனை மதிப்பை அடைய ஐந்து முக்கிய தொழில்களை இலக்காகக் கொண்டுள்ளது.

அந்த ஐந்து தொழில்கள் தற்போது சிலாங்கூரில் உள்ள முக்கியமான துறைகளாகும் என முதலீட்டு துறை பொறுப்பு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார்.

“தீபகற்பத்தின் நடுவில் உள்ள சிலாங்கூரின் மூலோபாய இடமே இந்த ஐந்து தொழில்கள் முக்கிய இலக்காக இருக்கக் காரணம் ஆகும்.

“நாங்கள் சிலாங்கூரில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்களை மட்டும் குறிவைக்கவில்லை மாறாக மற்ற மாநிலங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்களையும் குறிவைக்கிறோம், ஏனெனில் நாங்கள் ஆசியானுக்கான நுழைவாயிலாக இருக்க விரும்புகிறோம்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஐந்து தொழில்கள் மின் மற்றும் மின்னணு துறை; உணவு மற்றும் பானங்கள் செயலாக்கம்; டிஜிட்டல் முதலீடு; தளவாட சேவைகள்; அத்துடன் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து பொருட்கள் ஆகும்.

சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு 2023 மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கிடையில் மதிப்புமிக்க கூட்டாண்மைத் துறையாக மாறும் என்று சீ ஹான் எதிர்பார்க்கிறார். இதன் மூலம் பொருளாதாரம் வேகமாக மீட்க முடியும்.

அடுத்த ஆண்டு பார்வையாளர் இலக்கை அடைய மாநாடு பெரிய அளவில் நடத்தப்படும்.

“இந்த நான்கு நாள் அமர்வு உண்மையில் போதுமானதாக இல்லை, ஏனென்றால் முதலீட்டாளர்களுக்குப் பல செயல்பாடுகள் உள்ளன. அடுத்த ஆண்டு அதை விரிவுப்படுத்துவோம் மற்றும் இரண்டு அல்லது மூன்று முக்கிய கண்காட்சிகளாகப் பிரிப்போம்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு 2023 கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அக்டோபர் 19 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இது 50,000 பார்வையாளர்களின் வருகையை இலக்காகக் கொண்டுள்ளது.

முதலீட்டு மாநாட்டில் ஆறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன, அதாவது சிலாங்கூர் சர்வதேச கண்காட்சி (உணவு மற்றும் குளிர்பானம்) மற்றும் சிலாங்கூர் சர்வதேச கண்காட்சி (மருத்துவம்) ஆகும்.

மேலும், சிலாங்கூர் தொழில் பூங்கா கண்காட்சி, சிலாங்கூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், சிலாங்கூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்காட்சி மற்றும் ஆசிய வணிக மாநாடு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Pengarang :