NATIONAL

ஜொகூரில் இணைய சூதாட்டக் கும்பல் முறியடிப்பு- 153 பேர் கைது

ஜொகூர் பாரு, செப் 29 -  இம்மாதம்  22ஆம் தேதி முதல் நேற்று வரை ஜோகூரின்  136 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட "ஓப் டாடு" சிறப்பு அதிரடி நடவடிக்கையில் இணைய சூதாட்டம் மற்றும் கள்ள லாட்டரி விற்பனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 153 
நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நடவடிக்கையில் 18 முதல் 66 வயதுக்குட்பட்ட 125 ஆண்களும் 28 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமாட் தெரிவித்தார்.

அவர்களில் 115 பேர் உள்ளூர் ஆண்கள் மற்றும் 10 பேர் வெளிநாட்டினர் ஆவர். மேலும், ஒன்பது வெளிநாட்டு பெண்களுடன் 19 உள்ளூர் பெண்களும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்த அதிரடி நடவடிக்கைகளில் பல்வேறு ரகங்களிலான 163 கைப்பேசிகள்,  61 
கையடக்க பிரிண்டர்கள் மற்றும் 32,699 வெள்ளி  ரொக்கம் ஆகியவற்றை நாங்கள் 
பறிமுதல் செய்தோம்  என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சூதாட்ட வளாகங்களில்  உரிமத்தை ரத்து செய்யவும் மின் இணைப்பை துண்டிக்கவும்  விண்ணப்பம் செய்துள்ள நிலையில்  ஊராட்சி மன்றங்கள் மற்றும் தெனாகா நே,னல் பெர்ஹாட்டின் ஒப்புதலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைப்பதற்காக சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கமாருல் ஜமான் கூறினார்.

1953 ஆம் ஆண்டு பொதுச் சூதாட்ட வளாகச் சட்டத்தின் பிரிவு 4A (a) மற்றும் 4B (a) 
இன் கீழ்  இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் 
நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு  50,000 வெள்ளி வரையிலான அபராதம்  மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றார் அவர்.

Pengarang :