NATIONAL

கெடாவில் வெள்ளம்- பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,813 பேராக அதிகரிப்பு

கோலாலம்பூர், செப் 28- கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் 
எண்ணிக்கை நேற்றிரவு 530 குடும்பங்களைச் சேர்ந்த 1,813 பேராக அதிகரித்தது. நேற்று காலை இந்த எண்ணிக்கை 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,220 பேராக இருந்தது  குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அனைவரும் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொகோக் செனா மற்றும் பாலிங் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தற்போது 13 தற்காலிக நிவாரண 
மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று  மலேசிய பொது தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மை செயலகத்தின் கெடா மாநிலத் தலைவர் கெடா மேஜர் முகமது சுஹைமி முகமது ஜைன் கூறினார்

குபாங் பாசு, கோத்தா ஸ்டார் மற்றும் பொகோக் செனாவில் தலா மூன்று நிவாரண மையங்களும்  பாலிங்கில் நான்கு நான்கு மையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பெர்லிஸ் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42லிருந்து  48 பேராக அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஆராவ்,   குபாங் காஜா தேசியப் பள்ளியில் செயல்படும் தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர   கம்போங் அலோர் ஆராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த  மேலும் ஆறு பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பெர்லிஸ் மாநில பொது தற்காப்புப் படையின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் முகமது இஸாமி முகமணு டாவுட் கூறினார்.

இதுவரை இந்த நிவாரண மையத்தில் 31 பெரியவர்கள், 15 சிறார்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்கிய 17 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு மழை பெய்யாமலும் கடலின் நீர் மட்டம் உயராமலும் இருந்தால்  
பாதிக்கப்பட்டவர்கள் நாளை  வீடு செல்ல அனுமதிக்கப்படலாம் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

Pengarang :