NATIONAL

பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்ட 26 தமிழ்ப்பள்ளிகள் குறித்து கல்வி அமைச்சிடம் பேச்சுவார்த்தை- அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா செப் 29-
பத்துக்கும் குறைவான மாணவர்களை
கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகள்
பிரச்சனைகள் குறித்து கல்வி அமைச்சுடன்
பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று
மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று
அறிவித்தார்.

பேராக்கில் 10 பள்ளிகள், கெடாவில் 6
பள்ளிகள், பகாங்கில் 4 பள்ளிகள்,
சிலாங்கூரில் 3 பள்ளிகள், ஜோகூரில் 2
பள்ளிகள், நெகிரி செம்பிலானில் 1 பள்ளியும்
10க்கும் குறைவான

மாணவர்களை கொண்டிருக்கின்றன.
இந்த பள்ளிகள் காப்பாற்றப்படவில்லை
என்றால் மிக விரைவில் மூடும் நிலைக்கு
தள்ளப்படும்.

இந்த பள்ளிகள் மூடப்படாமல் இருப்பதை
உறுதிசெய்ய இடமாற்றம் செய்யப்பட
வேண்டும் என்று ஆர்வலர் அருண் துரைசாமி
இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம்
கோரிக்கையை முன் வைத்தார்.

வெர்னாகுலர் ஸ்கூல் எக்ஸலன்ஸ் மையத்தை
(Centre for Vernacular School Excellence)
வழிநடத்தும் அருண் துரைசாமி தலைமையில்
குமரன் மாரிமுத்து,ராஜசேகரன் மாரிமுத்து,
ஷாவன்ராஜ் ஆகியோர் அடங்கிய தமிழ்ப்
பள்ளிகள் தன்னார்வ தொண்டு
நிறுவனத்தினர் இன்று மனிதவள அமைச்சர்
சிவகுமாரை நேரில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.

இந்த முக்கிய சந்திப்பில் 140 தமிழ்ப்
பள்ளிகளை இடமாற்றம் செய்யத் தவறினால்,
மீள முடியாத இயற்கை மரணத்தை அவை
எதிர்கொள்ளும் அபாயம் ஏற்படும் என்று
அருண் துரைசாமி சுட்டிக் காட்டினார்.

“கடந்த 40 ஆண்டுகளில், கிராமப்புறங்கள்
மற்றும் தோட்டங்களிலிருந்து
நகர்ப்புறங்களுக்கு இந்தியர்கள் பெருமளவில்
இடம் பெயர்ந்துள்ளனர்,

அங்கு கிட்டத்தட்ட 89% இந்திய மக்கள்
இப்போது நகரங்களில் வாழ்கின்றனர்.

இதற்கிடையில், 67% தமிழ் பள்ளிகள்
இன்னும் தோட்டங்களிலும்
கிராமப்புறங்களிலும் அமைந்துள்ளன,
இவற்றில் 62% பள்ளிகள் தோட்டத்திற்கு சொந்தமான நிலத்தில் அமர்ந்துள்ளன என்று
அவர் கூறினார்.

மேலும் முதல் கட்டமாக பத்துக்கும்
குறைவான மாணவர்களை கொண்டிருக்கும்
26 தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற மனிதவள
அமைச்சர் சிவகுமார் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்
கொண்டார்.

அருண் துரைசாமி தலைமையிலான
குழுவினர் முன் வைத்த கோரிக்கைகளை
அக்கறையுடன் கேட்டறிந்த அமைச்சர்
சிவகுமார் தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கி
இருக்கும் பிரச்சனைகள் தமக்கு நன்றாக
தெரியும் என்றார்.

தமிழ்ப்பள்ளிகளுக்காக நாடாளுமன்றத்தில்
பலமுறை குரல் கொடுத்திருக்கிறேன். பல போராட்டங்களில் கலந்து
கொண்டிருக்கிறேன்.

ஆகவே பத்துக்கும் குறைவான மாணவர்களை
கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிகள்
பிரச்சனைகள் குறித்து மிக விரைவில் கல்வி
அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்துவேன் என்று அமைச்சர் சிவகுமார்
தெரிவித்தார்.


Pengarang :