NATIONAL

இந்தோ. பெண்ணைக் கடத்தி வெ.540,000 பிணைப்பணம் கோரினர்- ஒன்பது ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

ஜோர்ஜ் டவுன், செப் 29- குத்தகையாளர் ஒருவரின் மனைவியான
இந்தோனேசிய பெண்ணைப் பிணைப்பணத்திற்காகக் கடத்தியதாக ஒன்பது
ஆடவர்கள் மீது இங்குள்ள குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

பினாங்கு, மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைப்
பிரிவைச் சேர்ந்த குழுவினரின் பாதுகாப்புடன் இன்று காலை 8.30 அளவில்
அந்த ஒன்பது பேரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

மொழிப்பெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனைப்
புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவர்கள் அனைவரும் தலையை
அசைத்தனர். மாஜிஸ்திரேட் நட்ராத்துன் நாய்ம் முகமது சைடி
முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது
குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 7ஆம் தேதி காலை 7.00 மணியளவில் பாயா தெருபோங்,
பங்சாபுரி ஸ்ரீ அமானில் உள்ள ஒரு வீட்டில் 540,000 வெள்ளி பிணைப்பணம்
கோரும் நோக்கில் 36 வயதுடைய அந்த இந்தோனேசிய மாதுவைக்
கடத்தியத்தாக 29 முதல் 41 வயது வரையிலான அந்த ஒன்பது பேர் மீதும்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் 1961ஆம் ஆண்டு (சட்டம் 365) ஆள் கடத்தல்
சட்டத்தின் 3 வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 34வது பிரிவின் கீழ்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்
அவர்களுக்கு 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை,
மற்றும் பிரம்படி வழங்கப்படும்.

அரசு தரப்பில் இந்த வழக்கை துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் தர்ஷினி
எஸ்.முருகன் நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின்
சார்பில் சியாங் கியான் ஹோங் ஆஜரானார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின்
வழங்கப்படாது என்பதால் அவர்கள் அனைவரும் சிறையில் தடுத்து
வைக்க உத்தரவிடப்பட்டனர். இந்த வழக்கின் மறு விசாரணையை
நீதிமன்றம் வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

குத்தகையாளரான கணவர் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை
என்பதற்காக கும்பல் ஒன்று அவரின் மனைவியைக் கடத்தி பத்து நாட்கள்
சித்திரவதை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :