NATIONAL

பொருள் விலையேற்றத்தால் அவதியுறும் மக்களுக்கு இயன்றவரை உதவ அரசு முயற்சி- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், செப் 29- அத்தியாவசியப் பொருள்களின்
விலையேற்றத்தால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு
உதவுவதற்கு அரசாங்கம் இயன்ற வரை முயற்சி மேற்கொண்டு வருவதாக
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் பொருள் விலையேற்றம் கண்டுள்ளதை ஒப்புக் கொண்ட அவர்,
இவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தும்படி இடைக்கால வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது
அலி மற்றும் துணையமைச்சர் டத்தோ பவுஸியா சாலோ ஆகியோரைத்
தாம் பணித்துள்ளத்தாகச் சொன்னார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடியும்
வாழ்க்கைச் செலவின அமலாக்க மன்றத்தின் கண்காணிப்பு குழுவின்
வாயிலாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக அவர்
குறிப்பிட்டார்.

உண்மையில் பிரச்சனை உள்ளது. அத்தியாவசியப் பொருள்
விலையேற்றத்தை நான் நான் ஒப்புக் கொள்கிறேன். அரிசி ஏற்றுமதிக்கான
கட்டுப்பாடு மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
காரணமாக சில நாடுகளில் அமைதியின்மைக் காணப்படுவதை நாம்
காண்கிறோம்.

இவை யாவும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பொருள்களின்
விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எது எப்படி இருப்பின், நாம்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து முயன்று வருகிறோம் என
அவர் சொன்னார்.

டி.எச், வாரியத்தின் 60வது பொன் விழா கொண்டாட்டத்தை இங்குள்ள
மெனாரா டி.எச். கட்டிடத்தில் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா
ரியாத்துட்டின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுடன் இன்று
நடைபெறவிருக்கும் சந்திப்பு அமைச்சரவை மாற்றம் பற்றியதாக
இருக்குமா? என நிருபர்கள் வினவிய போது, இது மாமன்னருடன்
நடத்தப்படும் வழக்கமாக சந்திப்பு என அன்வார் பதிலளித்தார்.

அதற்கான சாத்தியமும் உள்ளது. அது பற்றி நான் பின்னர்
யோசிக்கவிருக்கிறேன். அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே காலியாக
உள்ளதால் அதில் மாற்றம் செய்வதற்கான அவசரத் தேவை
தற்போதைக்கு எழவில்லை என்று அவர் சொன்னார்.


Pengarang :