NATIONAL

கே.எல்.ஐ.ஏ.வில் சுங்கத்துறை அதிரடிச் சோதனை- வெ.20 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

புத்ரா ஜெயா, செப் 29- சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக
விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் தீர்வையற்ற வணிகப்
பகுதியில் அரச மலேசிய சுங்கத் துறை கடந்த 5ஆம் தேதி மேற்கொண்ட
அதிரடிச் சோதனை நடவடிக்கையில் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 61
கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

வாகன உபரி பாகங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த மூன்று பொட்டலங்கள்
மீது சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது 60 பச்சை நிற
பிளாஸ்டிக் பொட்டலங்களில் மெத்தம்பெட்டமின் போதைப் பொருள்
மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மத்திய
மண்டலத்திற்கான அமலாக்க பிரிவின் நடவடிக்கை இயக்குநர் வோங் புன்
சியான் கூறினார்.

மறுபதனீடு செய்யப்பட்ட சீனத் தேயிலை என்ற வாசகத்தோடு மேலும்
சில வாசகங்கள் மாண்டரின் மொழியில் அச்சிடப்பட்டிருந்த அந்த
பொட்டலங்களில் பளிங்கு நிற பவுடர் காணப்பட்டது என்று அவர்
சொன்னார்.

சீனத் தேயிலை பொட்டலங்களில் போதைப் பொருளை மறைத்து
வைத்து அதனை வாகன உபரி பாகங்கள் என சுங்கத்துறையிடம்
பிரகடனப்படுத்துவது போதைப் பொருள் கடத்தல் கும்பலின் வழக்கமான
நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த கடத்தல் நடவடிக்கையில் தொடர்புடைய தரப்பினரை அடையாளம்
காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த பொட்டலங்கள் அனைத்திலும் சபா மாநிலத்தின் கோத்தா
கினபாலுவில் உள்ள ஒரு இடத்திற்கு அனுப்புவதற்கு பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது என்றார் அவர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையும் மரண
தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் ஆயுள் தண்டனை மற்றும் 12
பிரம்படிகளும் வழங்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகரப்
போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இந்த சம்பவம் குறித்து
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :