NATIONAL

அம்பார் தெனாங் பள்ளி பெ.ஆ.சங்கம் கோரும் நிலம் பள்ளிக்குச் சொந்தமானதல்ல- பாப்பாராய்டு விளக்கம்

ஷா ஆலம், அக்.3- அம்பார் தெனாங் தமிழ்ப்பள்ளியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் திடல் உண்மையில் அப்பள்ளிக்கு சொந்தமான நிலம் அல்ல என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு  உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
திட்ட அனுமதி வரையறையின்படி அம்பார் தெனாங் தமிழ்பள்ளிக்கு அருகில் உள்ள நிலம் பொது விளையாட்டுத் திடல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சம்பந்தப்பட்ட நிலம் பள்ளிக்குச் சொந்தமான திடல் என்று தவறான தகவலைத் தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் அம்பார் தெனாங் தமிழ்பள்ளிக்கு 2.9 ஏக்கர் நிலம் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் முயற்சியில் அது 3.1 ஏக்கராக அதிகரித்துக் கொடுக்கப்பட்டது. மேலும் டிங்கில் வட்டார திட்ட அனுமதி வரையறையின்படி பள்ளிக்கு அருகில் இருக்கும் 1.3 ஏக்கர் திடலைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வீ.கணபதிராவ் ஒதுக்கிக் கொடுத்தார்.
அந்த நிலத்தை பள்ளிக்குரிய திடல் என்று பள்ளி நிர்வாகம் தற்பொழுது உரிமை கோருகிறது. அந்தத் திடல், சுற்று வட்டார பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரியது ஆகும்.
குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்ட காலக்கட்டத்தில், அம்பார் தெனாங்கில் வசிக்கும் தோட்டப்புற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஏறக்குறைய 50 மாணவர்கள் பயிலும் அப்பள்ளி அமைந்துள்ள 3.1 ஏக்கர் நிலம், வீ.கணபதிராவ் முயற்சியால் நில அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் சிலாங்கூர் இன்றுவிடம் தெரிவித்தார்.

Pengarang :