NATIONAL

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், அக் 4- தனது தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து  தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுடன் நேற்று தாம் நடத்தியச் சந்திப்பு  அமைச்சரவைக்கு முன் வழக்கமாக நடைபெறும் கூட்டம்தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதன் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை.  நாளை (இன்று) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தைப் பற்றி விவாதிக்க துவாங்குவுடன் சந்திப்பு நடத்தினேன் என்று அவர் தெரிவித்தார்.

இது அமைச்சரவை மாற்றம் தொடர்பான சந்திப்பு அல்ல.  அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நான் சபாவிற்கும் பின்னர் அபுடாபிக்கும் செல்கிறேன் என்று   கஸானா மெகாட்ரெண்ட்ஸ் 2023 ஆய்வரங்கின் நிறைவு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனிடையே, தற்போது பல மாநிலங்களை பாதித்துள்ள புகைமூட்டப் பிரச்சனை  குறித்து கேட்ட போது,  எல்லை தாண்டிய இந்த புகைமூட்டப் பிரச்சனை குறித்து  இந்தோனேசியா உட்பட ஆசியானில் உள்ள தனது சகாக்களுடன் விவாதிக்கும்படி  இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி பணிக்கப்பட்டுள்ளதாக அன்வார் கூறினார்.


Pengarang :