NATIONAL

ஹிஜ்ரா ஏற்பாட்டில் கிள்ளானில் தீபாவளிச் சந்தை- 100 தொழில் முனைவோருக்கு வர்த்தக வாய்ப்பு

கோலக் கிள்ளான், அக் 5- யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அடுத்த மாதம்
தீபாவளிச் சந்தையை நடத்தவுள்ளது. இந்த வர்த்தகச் சந்தையில் 100
இந்திய தொழில்முனைவோருக்கு வர்த்தக வாய்ப்பு வழங்கப்படும் என்று
தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
நஜ்வான் ஹலிமி கூறினார்.

கிள்ளான், செட்டி பாடாங்கில் நடைபெறும் இந்த தீபாவளிச் சந்தையில்
பெருநாளுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்வதற்குரிய
வாய்ப்பு இந்திய வணிகர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வியாபார லைசென்ஸ் மற்றும் கடைகளை (தற்காலிக கூடாரங்கள்)
ஏற்பாடு செய்யும் பொறுப்பினை சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய
தொழில் ஆர்வலர் மையம் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.

இந்த சந்தையில் 50 முதல் 100 வணிகர்கள் பங்கு கொள்ளவிருக்கின்றனர்.
இந்த கடைகளுக்கான விண்ணப்பங்கள் இன்னும் இரு வாரங்களில்
வரவேற்கப்படும் என்று சித்தம் ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற
2023ஆம் ஆண்டிற்கான சூப்பர் டிக்டாக் வியூகப் பயிற்சித் திட்டத்தை
முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் பயிற்சியில் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 40
இந்திய தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின்
நிறைவு விழாவில் ஹிஜ்ரா அறவாரியத்தின் இடைக்கால தலைமைச்
செயல்முறை அதிகாரி நோர்மைஸா யாஹ்யாவும் கலந்து கொண்டார்.


Pengarang :