NATIONAL

ஆடவரிடம் 24.5 லட்சம் மோசடி- வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக் 5- செயல்பாட்டில் இல்லாத கிரிப்டோகரன்சி
முதலீட்டுத் திட்டத்தில் ஆடவர் ஒருவரிடம் 24 லட்சத்து 50 ஆயிரம்
வெள்ளியை மோசடி செய்ததாக வர்த்தகர் ஒருவர் மீது இங்குள்ள
செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி முகமது காஃபி சே அலி முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு
வரப்பட்ட குற்றச்சாட்டை ஜோனதன் வோங் பாட் பூ (வயது 39) என்ற
அந்த வர்த்தகர் மறுத்து விசாரணை கோரினார்.

ரிஸ் பையர்ஆர்ம் சென். பெர்ஹாட் மற்றும் கோலின்டேல்
இண்டர்நேஷனல் சென் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களில் முதலீடு
செய்ய்யும்படி ஆசை வார்த்தை கூறியதன் மூலம் அட்ரியன் சிம் வாங்
என்ற நபரை 24 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி தொகையை அவ்விரு
நிறுவனங்களிலும் முதலீடு செய்ய வைத்ததாக அந்த வர்த்தகர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம் 23ஆம் தேதிக்கும் ஆகஸ்டு மாதம் 3ஆம்
தேதிக்கும் இடையே மெனாரா பிரிஸ்திஜ் கட்டிடத்தில் இக்குற்றத்தைப்
புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஐந்தாண்டுச் சிறை
அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 417வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு
கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 100,000 வெள்ளி
ஜாமினில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி முகமது காஃபி,
இவ்வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்தார்.


Pengarang :