SELANGOR

பெலாங்கை தொகுதியில் நாளை தேர்தல்- 16,456 வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவர்

பெந்தோங், அக் 6- பெலாங்கை சட்டமன்றத் இடைத்தேர்தலுக்கான
பிரசாரம் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும்
வாக்களிப்பில் தங்களின் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதை
தொகுதியில் உள்ள 16,456 வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.

வாக்காளர்களைக் கவர்வதற்கு பல்வேறு பிரசார நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகள் இன்றிரவு 11.59 மணி வரை
தங்களுக்குள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி கூட்டங்கள், பிரசாரங்கள் என
பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.

இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ
அமிஷார் அபு ஆடாம், பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் காசிம் சமாட்
மற்றும் சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ஜூல்ஹாஸ்னி
ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பெலாங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஜோஹாரி ஹருண் கடந்த ஆகஸ்டு மாதம்
17ஆம் தேதி ஷா ஆலம் அருகே நிகழ்ந்த விமான விபத்தில்
பலியானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல்
நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தலுக்காக ஒன்பது வாக்களிப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளன. அவை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி
வரை திறந்திருக்கும். வாக்குகளை எண்ணும் பணி பெல்டா கெமாசுல்
சமூக மண்டபத்தில் நடைபெறும்.

இந்த தொகுதியில் மொத்தம் 16,456 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களில் 36 பேர் போலீஸ்காரர்களாவர்.
மேலும் மூன்று வாக்காளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

கடந்த 15வது பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ ஜோஹாரி 1,048 வாக்குகள்
பெரும்பான்மையில் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.


Pengarang :