NATIONAL

கடன் பிரச்சனை காரணமாக ஆடவருக்கு கத்திக் குத்து- கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ஜோர்ஜ் டவுன், அக் 12- கடன் பிரச்சனை தொடர்பில் ஏற்பட்ட கைகலப்பில்
ஆடவர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம்
இங்குள்ள லெபோ கிச்சிலில் உள்ள மார்க்கெட் ஒன்றில் நேற்று நிகழ்ந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.00 மணியளவில்
தாங்கள் தகவலைப் பெற்றதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி சோஃபியான் சந்தோங் கூறினார். சம்பவ இடத்தை காவல்
துறையினர் அடைந்த போது 26 வயதுடைய ஆடவர் ஒருவர் இரத்த
வெள்ளத்தில் காரில் கிடப்பதைக் கண்டனர் என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கால் மற்றும்
வயிற்றில் ஆழமானக் காயங்கள் காணப்பட்டன. கூர்மையான ஆயுதத்தால்
இக்காயங்கள் ஏற்படுத்தப்ட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த
ஆடவர் சிகிச்சைக்காக உடனடியாக பினாங்கு மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆடவரின் உடல் நிலை சீராக இருந்து வருவதாகவும் கடன்
பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என
நம்பப்படுவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 51 வயது ஆடவர் ஒருவர் மெக்கலம்
பகுதியில் நேற்று மாலை 6.40 மணியளவில் கைது செய்யப்பட்டதாகக்
கூறிய அவர், அந்த சந்தேக நபரை விசாரணைக்காகத் தடுத்து
வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 326வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும்
தெரிவித்தார்.


Pengarang :