ECONOMYNATIONAL

வெள்ளத்தை எதிர்கொள்ள நட்மாவுக்கு 30 கோடி வெள்ளி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக் 13- வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு (நட்மா) 30 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டவுடன் வழங்கப்படவுள்ள 10 கோடி வெள்ளியும் அதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஆண்டு இறுதியில் வெள்ளப் பேரிடர் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு இந்த நிதி  ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

இது தவிர தேசிய பேரிடர் உதவி அறக்கட்டளைக்கு செய்யப்படும் ஒதுக்கீட்டையும் 20 கோடி வெள்ளியாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்தாண்டு பேரிடர் அறக்கட்டளைக்கான நிதி ஒதுக்கீடு 10 கோடி வெள்ளியாக மட்டும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின்  நலனை உறுதி செய்வதற்கு ஏதுவாக அம்மையங்களில் வசதிகளை நட்மா மேம்படுத்தும் என்று அவர் நாடாளுமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறினார்.

நாடு முழுவதும் ஒன்பது  நிரந்தர வெள்ளத் துயர் துடைப்பு மையங்களை அமைப்பது, 1,500 தற்காலிக நிவாரண மையங்களில் கழிப்பறை, குளியலறைகளை தரம் உயர்த்துவது மற்றும் நடமாடும் கழிப்பறைகளை வாடகைக்கு எடுப்பது ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும் என்று நிதியமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :