MEDIA STATEMENTNATIONAL

சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த பொழுதுபோக்கு வரி குறைப்பு பெரிதும் துணை புரியும்

கோலாலம்பூர், அக் 14- உள்நாட்டுக் கலைஞர்களுக்கான பொழுதுபோக்கு வரியை சுழியம் விழுக்காடாகவும் வெளிநாட்டுக் கலைஞர்கள் இங்கு ஏற்பாடு செய்யும் கலைநிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்படும் வரியை 25 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகவும் குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை சுற்றுலாத் துறையின் வாயிலாக நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டு காண்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்காக பேங்க் நெகாரா கண்காணிப்பின் கீழ் 90 கோடி வெள்ளி ஒதுக்கீடு  செய்யப்படும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு செயலிகள் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தரப்பினருக்கு ஊக்குவிப்பாக அமையும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் 5ஜி அடைவு நிலை எண்பது விழுக்காட்டை எட்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் சாதாரண மக்கள் மட்டுமின்றி நிறுவனங்கள் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினர் பயன் பெற இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தாக்கல் செய்த 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அனைத்து நிலையிலான மக்களும் பயன் பெறும் வகையில் விரிவான அனுகூலங்களைக் கொண்டுள்ளது என்று அவர் வர்ணித்தார்.

மேலும், தொலைத் தொடர்பு துறைக்கான விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி.) ஆறு விழுக்காடாக தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.

உணவு, பானம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளுக்கு எஸ்.எஸ்.டி. வரி அதிகரிப்பு அமல்படுத்தப்படாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பின் வழி மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் 25 முதல் 30 விழுக்காடு வரையிலான பொருள்கள் விலையேற்றம் காணாது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :