NATIONAL

லெபனானில் உள்ள மலேசியத் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினர் நாடு திரும்ப உத்தரவு

புத்ராஜெயா, அக் 16- லெபனான் நாட்டின் தென் பகுதி மீது இஸ்ரேல்
நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, பெய்ரூட்டில் உள்ள
மலேசியத் தூதரகத்தின் பணியாளர்களின் குடும்பத்தினரைத் தாயகத்திற்குத்
திரும்ப அழைக்க மலேசியா முடிவு செய்துள்ளது.

மலேசிய பிரஜைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும்
அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக
வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கூறியது.

இருப்பினும் அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரகம் வழக்கம் போல்
தொடர்ந்து செயல்படும் என்று விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் கூறியது.

முக்கியமற்ற நோக்கங்களுக்காக லெபான் நாட்டிற்கு பயணம்
மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள் அப்பயணத்தை ஒத்தி
வைக்குமாறு அது கேட்டுக் கொண்டது.

லெபானிலுள்ள மலேசியர்கள் மற்றும் அந்நாட்டில் ஐ.நா.வின் இடைக்கால
பாதுகாப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள மல்பாட் எனப்படும் மலேசியா
ஆயுதப்படை- ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி
செய்யும்படியும் அங்குள்ள தூதரகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

லெபானில் வசிப்பிடத் தகுதியைப் பெற்றுள்ள 12 மலேசிய பிரஜைகளுடன்
பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் தொடர்பில் இருந்து வருகிறது.
கடந்த 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்துடன் ஏற்பட்டுள்ள சண்டையின்
ஒரு பகுதியாக இஸ்ரேல் தென் லெபனான் மீது இடை விடாத ராக்கெட்
தாக்குதல்களை நடத்தி வருகிறது.


Pengarang :