NATIONAL

கெமமான் இடைத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் இன்று அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், அக் 17- கெமமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நோக்கத்திற்காக  தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே தலைமையில் புத்ராஜெயாவில் உள்ள இ.சி. டவரில் இன்று காலை 10.00 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி, வேட்புமனுத் தாக்கல் தேதி, வாக்குப்பதிவு தேதி, பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிற ஏற்பாடுகளை முடிவு செய்யும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த  சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு அப்துல் கனி செய்தியாளர் சந்திப்பை  நடத்தவுள்ளார்.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கெமமான் தொகுதியில்  பாஸ் கட்சி  வேட்பாளர் சே அலியாஸ் ஹமிட் பெற்ற வெற்றி செல்லாது என திரங்கானு தேர்தல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அங்கு  இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின் போது  வாக்காளர்களைக் கவரும்  நோக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதை மனுதாரர் வான் முகமட் ஹிஷாம் வான் அப்துல் ஜாலீல் (வாக்காளர்) வெற்றிகரமாக நிரூபித்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் பாஸ் கட்சி பெற்ற வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த முடிவை எதிர்த்து  மேல்முறையீடு செய்வதில்லை என்று பாஸ் கட்சி இம்மாதம் 3ஆம் தேதி முடிவு செய்தது.

– பெர்னாமா


Pengarang :