NATIONAL

மைஏர்லைன் நிறுவனத்தின் நடத்துநர் சான்றிதழ் 90 நாட்களுக்கு முடக்கம்

புத்ராஜெயா, அக்டோபர் 17 – மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ.எம்.) மைஏர்லைன் நிறுவனத்தின் விமான நடத்துநர் சான்றிதழை (ஏ.ஓ.சி.) நேற்று தொடங்கி 90 நாட்களுக்கு முடக்கி வைத்துள்ளது.
அந்நிறுவனம் மீது விரிவான தணிக்கையை மேற்கொள்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த விமான நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் வரை  2016ஆம் ஆண்டு  சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்  193 (3) விதியின் கீழ் இந்த முடக்கம்  அமலில் இருக்கும் என்று சி.ஏ.ஏ.எம் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நோரஸ்மான் மாமுட் கூறினார்.

விமான நிறுவனத்தின் செயல் திறனை மறுமதிப்பீடு செய்வதற்காக இந்த தற்காலிக சேவை நிறுத்த காலத்தில் விரிவான தணிக்கை நடத்தப்படும் என்று அவர்   அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்

குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடி, நிலுவையில் உள்ள பங்குதாரர் மறுசீரமைப்பு மற்றும் மறுமூலதனமாக்கல் ஆகிய காரணங்களால் மைஏர்லைன் நிறுவனம் தனது சேவையை கடந்த  அக்டோபர் 12 முதல் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.

செயல்பாட்டு நிபந்தனைகளுக்கேற்ப  பாதுகாப்பான சேவையை மேற்கொள்வதற்கான விமான நடத்துநரின்  திறன்களை அறிந்து கொள்ள  ஏஓசி வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என்று நோராஸ்மேன் கூறினார்.

மைஏர்லைன் நிறுவனம் மீது கடந்த  மே 29 முதல் ஜூன் 1 வரை ஏ.ஓ.சி. மேற்கொண்ட  புதுப்பித்தலுக்கான பாதுகாப்பு தணிக்கையின்போது  நிதி நெருக்கடிக்கான எந்த அறிகுறிகளும் அந்நிறுவனத்திடம் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நிதி சிக்கல்கள் ஏற்பட்டால், செயல்பாடுகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் இருப்பதற்கு ஏதுவாக  சி.ஏ.ஏ.எம்.மிற்கு  எழுத்துப்பூர்வ அறிவிப்பு உடனடியாக செய்யப்பட வேண்டும். எனினும் மைஏர்லைன் இன்றுவரை  அத்தகைய அறிவிப்பை  சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


Pengarang :