NATIONAL

கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை நிராகரிக்க வேண்டாம்- பொது உயர்கல்விக் கூடங்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, அக் 17- வறுமை காரணமாக உயர்கல்விக் கட்டணம் செலுத்த
முடியாத நிலையிலிருக்கும் மாணவர்களுக்கு நுழைவு அனுமதியை
மறுக்க வேண்டாம் என் அரசாங்க உயர்கல்விக் கூடங்களுக்கு பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும்
உயர்கல்விப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

எந்த அரசாங்கப் பல்கலைக்கழகமும் ஏழை மாணவர்களுக்கு நுழைவு
அனுமதியை மறுக்கக் கூடாது என நான் விரும்புகிறேன். அவர்களை
முதலில் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். கட்டணம் தொடர்பான
விவகாரங்களை சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது அமைச்சு பின்னர்
தீர்க்கும் என்றார் அவர்.

வரலாற்றில் இதுவே முதல் தடவையாக, ஏழைகளாகவும் பொருளாதார
வசதியில்லாதவர்களாகவும் இருக்கும் எங்கும், எந்த இனத்தையும் சேர்ந்த
எங்கள் பிள்ளைகள் உயர்கல்விக் கூடத்தில் கல்வி அனுமதி மறுக்கப்படக்
கூடாது. அவர்கள் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார்
அவர்.

இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் உரையாற்றிய போது நிதியமைச்சருமான அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

நுழைவுக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் அம்பாங் மற்றும்
தம்புனைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி
மறுக்கப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் சொன்னார்.

தற்போது உயர்கல்விக் கூடங்களில் பயின்று வரும் மாணவர்களும்
தங்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாத காரணத்திற்காக

அவர்கள் பதிவு செய்வதை தடுக்கக் கூடாது. அவர்கள் பாடங்களுக்கான
பதிவை முடித்தப் பின்னர் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் அவர்
கூறினார்.


Pengarang :