NATIONAL

காஸா மீதானத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்- மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர், அக் 19- காஸாவில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கும் பாலஸ்தீனர்களின் நிலத்தின் மீதான உரிமையை மறுக்கும் போக்கிற்கும் உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

அரசியல் ரீதியாக உரிமைகள் மற்றும் உடமைகளைப் பறிக்கும் முயற்சிகளைத்  தடுத்து நிறுத்துவதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஒ.ஐ.சி.) உறுப்பு நாடுகள், சர்வதேச சமூகம் மற்றும் பலம் வாய்ந்த நாடுகள் முன் வரவேண்டும்  என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காடிர் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மனிதாபிமான பாதைகளை திறக்க அனைத்துலகச் சமூகத்தை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் சொன்னார்.

நேற்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற  ஒ.ஐ.சி. வெளியுறவு அமைச்சர்கள்   செயற்குழுவின் சிறப்பு கூட்டத்தில்  கூட்டத்தில் ஜாம்ரி ஒரு தேசிய அறிக்கையை சமர்ப்பித்தார் என்று வெளியுறவு அமைச்சுஸ (விஸ்மா புத்ரா) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த கூட்டத்திற்கு சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தலைமை தாங்கினார்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கும் விளைவு ஆவணத்தையும் அது ஏற்றுக்கொண்டது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உடனடி முடிவு கட்டும் அதேவேளையில்  காஸா பகுதியில் இஸ்ரேலின் முற்றுகையை நிறுத்தி, பாலஸ்தீன மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை உலக நாடுகளும் அனைத்துலக சமூகமும் வழங்க வேண்டும் என்றும் அந்த ஆவணம் வலியுறுத்தியுள்ளது.

வடக்கு காஸாவில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி மருத்துவமனை மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மலேசியாவும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்த மிருகத்தனமான செயல் மனித பண்புகளுக்கு  எதிரானது என்பதோடு  சர்வதேச சட்டத்தையும் மீறுகிறது மலேசியா கூறியது.


Pengarang :