அல்-குட்ஸ் மருத்துவமனையைக் காலி செய்ய இஸ்ரேல் எச்சரிக்கை- உலக சுகாதார நிறுவனம் கவலை

ஜெனிவா, அக் 22-  காஸாவின்  வடக்கில் அமைந்துள்ள அல்-குட்ஸ் மருத்துவமனையை காலி செய்யுமாறு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம்  கவலை தெரிவித்துள்ளது.

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்  மட்டுமல்லாமல்,  பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட   நூற்றுக்கணக்கானவர்கள்   தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அந்த அமைப்பு எக்ஸ்  இடுகையில் கூறியதாக வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்,  இஸ்ரேலின் அந்த அச்சுறுத்தல் குறித்த தனது கவலையை   உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எக்ஸ் பதிவின் வழி வெளிப்படுத்தினார்.

நாங்கள் பலமுறை வலியுறுத்தியபடி, நெரிசலான மருத்துவமனைகளில்  உள்ள நோயாளிகளை  உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த முடியாது.

நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் (சுகாதாரப் டணியாளர்கள்) தங்கள் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச சமூகம் மற்றும் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் தலையிட்டு காஸாவிலுள்ள அல் குட்ஸ் மருத்துவமனையை இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தலிருந்து பாதுகாக்குமாறு பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மாய் அல்கைலா முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.


Pengarang :