பிரதமர் துருக்கி பயணம்- அதிபர் எர்டோகனை சந்திக்கிறார்

இஸ்தான்புல், அக் 22 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் பணி நிமித்தப் பயணமாக துருக்கிக்கு நேற்று மாலை வந்தடைந்தார். இன்று அவர் அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனையும் சந்திக்க உள்ளார்.

பிரதமர் பயணம் செய்த  சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 10.45 மணிக்கு (மலேசிய நேரம் ஞாயிறு அதிகாலை 3.45) இஸ்தான்புல் கிராண்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அன்வாரின் பயணக்குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காடிர் மற்றும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சர் கைருல் பிர்டாவுஸ் அக்பர் கான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

துருக்கிக்கான மலேசியத் தூதர் சசாலி முஸ்தபா கமால், அங்காராவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர்கள் கிளாரா சூன் மே லின் மற்றும் அகமது ஹாஷிம் மாமுட் மற்றும் மலேசியத் தற்காப்பு உதவியாளர் கர்னல் முகமட் எடாபி தாவூட் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

இரு தலைவர்களுக்கிடையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலால்  வளர்ந்து வரும் கவலையும் அடங்கியுள்ளது.

காஸாவில் ஆளும் அதிகாரத் தரப்பினர்  ஹாமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட மோதல்களில் அக்டோபர் 7 முதல் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர்.

அதிபர்  எர்டோகனுடனான  சந்திப்பிற்குப் பிறகு, அன்வார் எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்குச் சென்று அதிபர் ஜனாதிபதி அப்டில் பாத்தா எல்-சிசியைச் சந்திக்கவிருக்கிறார்.

இச்சந்திப்பின் போது அவர்  பாலஸ்தீனத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்கும் வகையில் ரஃபா எல்லையைத்  திறப்பது குறித்து விவாதிக்க உள்ளார்.


Pengarang :