SELANGOR

நாளை நான்கு செகி ஃப்ரெஷ் பேரங்காடி கிளைகளில் மலிவு விற்பனை

ஷா ஆலம், அக் 26- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனை நாளை செகி ஃப்ரெஷ் பேராங்காடிகளின் நான்கு கிளைகளில்
நடத்தப்படும்.

கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருள்களை மலிவான
விலையில் விற்பனை செய்யும் இந்த இயக்கம் தெலுக் பங்ளிமா காராங்,
சுங்கை ஊடாங், சுங்கை பெசார் மற்றும் தஞ்சோங் காராங்கில் உள்ள
செகி ஃபிரெஷ் பேரங்காடிகளில் நடைபெறும்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும்
மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை
அமல்படுத்தியுள்ளோம் என செகி ஃப்ரெஷ் நிறுவனம் தனது பேஸ்புக்
பதிவில் கூறியது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ்.
மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம்
செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த
மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை
செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக்
கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி
ஃப்ரெஷ் பேரங்காடி கூறியது.

இந்த விற்பனையில் கோழி ஒரு கிலோ வெ.7.49 என்ற விலையிலும்
சியாகாப் மீன் கிலோ 7.00 வெள்ளிக்கும் டி கிரேட் முட்டை ஒரு தட்டு
10.00 வெள்ளிக்கும் கோதுமை ஒரு பாக்கெட் 1.99 வெள்ளிக்கும்
விற்கப்படுகிறது.


Pengarang :