NATIONAL

ரப்பர் தோட்டக்காரர்களுக்கு உதவி, பாலஸ்தீன நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவையில் முன்னுரிமை

கோலாலம்பூர், அக் 26- ரப்பர் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ரப்பர்
தோட்டக்காரர்களுக்கு உதவும் திட்டங்கள் மற்றும் பாலஸ்தீன நெருக்கடி
உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
முன்னுரிமை அளிக்கப்படும்.

விலைக் குறைவினால் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ள ரப்பர்
சிறுதோட்டக்காரர்களுக்கு உதவ மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
குறித்து விளக்கும்படி தோட்ட மற்றும் மூலத்தொழில் அமைச்சரை கோல
பிலா தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அட்னான் அபு
ஹசான் கேட்டுக் கொள்வார்.

அமைச்சர் கேள்வி அங்கத்தின் போது இந்த விவகாரத்தை டத்தோ
அட்னான் முன்வைப்பார் என்று நாடாளுமன்ற அகப்பகத்தில்
பதிவேற்றப்பட்டுள்ள இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீன விவகாரத்தில் பெஞ்சமின் நெதான்யாஹூவை அனைத்துலக
குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை
எடுப்பதில் மலேசியா இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது
குறித்து உள்துறை அமைச்சரிடம் பாசீர் மாஸ் பெரிக்கத்தான் உறுப்பினர்
அகமது ஃபாட்லி ஷாஹ்ரி கேள்வியெழுப்புவார்.

ஜொகூர் பாருவின் சென்ட்ரல் மற்றும் சிங்கப்பூரின் ஊட்லண்ட்ஸ்
நிலையத்திற்கிடையிலான மலாயான் ரயில்வே பெர்ஹாட் ஷட்டல்
சேவை குறித்தும் சிங்கப்பூருக்கான இரயில் சேவையை 36லிருந்து 50ஆக
உயர்த்தும் திட்டம் குறித்தும் போக்குவரத்து அமைச்சரிடம் பூலாய்
தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சுஹைசான் கையாட்
வினவுவார்.

கடந்த 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சிறார்
மேம்பாட்டு இலாகா உருவாக்கத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஸ்ரீ
அமான் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டோரிஸ் சோபியா ப்ரோடி மகளிர்,
குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் கேள்வி
தொடுப்பார்.


Pengarang :