NATIONAL

மலாய் மொழியில் எழுதப்படாதக் கடிதங்களைப் புறக்கணிப்பீர்- அரசுத் துறைகளுக்கு அன்வார் அறிவுறுத்து

சைபர்ஜெயா, அக் 26- தேசிய மொழி தவிர வேறு எந்த மொழியில்
எழுதப்பட்ட கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டாம் என்று அரசுத்
துறைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அறிவுறுத்தியுள்ளார்.

அரசு துறைகளுடனான தொடர்புகள் தேசிய மொழியில்தான் இருக்க
வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நிபந்தனையை
சில தரப்பினர் மீறுவதை அவர் நேற்று இங்கு தேசிய மொழி தசாப்தம்
மற்றும் தேசய வாசிப்பு தசாப்த நிகழ்வை தொடக்கி வைத்து ஆற்றிய
உரையில் சுட்டிக்காட்டினார்.

நான் அனைவருக்கும் (அரசாங்கத் துறைகள்) நினைவூட்ட விரும்புகிறேன்.
தேசிய மொழி அல்லாத மொழிகளில் எழுதப்பட்ட கடிதங்களை உள்நாட்டு
நிறுவனங்கள் அல்லது பொது மற்றும் தனியார் உயர்கல்விக்
கூடங்களிடமிருந்து பெற்றால் அதனை அவர்களிடமே திருப்பி அனுப்பி
விடுங்கள் என்றார் அவர்.

கலாசாரம், மொழி மற்றும் இலக்கியம் ஆகியவை தேசத்தின்
உருவாக்கத்தில் ஒரு அங்கமாக உள்ளன. நாம் அதனை ஒருபோதும்
குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அவர் நினைவுப்படுத்தினார்.

எனது இந்த நினைவூட்டல் கவனத்தில் கொள்ளப்படும் என
எதிர்பார்க்கிறேன். இந்த வழிகாட்டி தெளிவானது. பொதுச் சேவைத் துறை
தலைமை இயக்குநர் டத்தோ ஜூல்காப்ளி முகமதுவும் இங்கிருக்கிறார்
என அன்வார் குறிப்பிட்டார்.

மலாய் மொழி நாட்டின் தேசிய மொழி என அரசியலமைப்புச் சட்டத்தின்
152வது பிரிவு கூறுகிறது.

ஆங்கில மொழிக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் அரசாங்கத்தின் இந்த
நடவடிக்கை குறுகிய சிந்தனைப் போக்கு கொண்ட நாடு என்ற
தோற்றத்தை மலேசியாவுக்கு ஏற்படுத்தாது என்றும் பிரதமர் சொன்னார்.


Pengarang :