SELANGOR

சுகாதார விழிப்புணர்வுத் திட்டங்களை மாநில அரசு அதிகரிக்கும்- ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா தகவல்

கோல சிலாங்.கூர், அக் 26 – சுகாதார விழிப்புணர்வுத் திட்டங்களை மாநில
அரசு அதிகரிக்கவுள்ளதோடு நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து
சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக தொடர்ச்சியாக பரிசோதனைகளை
மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் அது ஈடுபடவுள்ளது.

சிகிச்சைக்கு அதிக செலவு பிடிக்கக்கூடிய தொற்றா நோய்களால் ஏற்படும்
பாதிப்புகளைக் குறைப்பதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக
சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்
கூறினார்.

தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஆண்டு
தோறும் அரசாங்கம் 965 கோடி வெள்ளியை செலவிட்டு வருவதை
2022ஆம் ஆண்டிற்கான மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார
நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் மாஹ்சே எனப்படும் சமூக ஆரோக்கியத் திட்டத்தை
அமல்படுத்துவதற்காக அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனை மற்றும்
ஃபைசர் மலேசியா நிறுவனத்துடன் இணைந்து மாரா தொழில்நுட்ப
பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நான் பெரிதும்
பாராட்டுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக பொது மக்கள் தங்கள்
உடலாரோக்கியம் மீது அதிக அக்கறை காட்டுவதற்குரிய
மனப்போக்கையும் பிரதிரூப மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்று
தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள புஞ்சா ஆலமில் உள்ள அல்-சுல்தான் மருத்துவனையில் நேற்று
நடைபெற்ற மாஹ்சே திட்ட தொடக்க விழா மற்றும் 2023 அனைத்துலக
இருதய தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :