NATIONAL

நான்கு சக்கர இயக்க வாகனம் மோதி குதிரை உயிரிழந்தது- செலாயாங்கில் சம்பவம்

கோலாலம்பூர், செப் 1- நான்கு சக்கர இயக்க வாகனம் மோதியதில் குதிரை
உயிரிழந்தது. இச்சம்பவம் செலாயாங், சுங்கை துவா- உலுயாம்
சாலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்த போது 54 வயதான அந்த நான்கு சக்கர இயக்க
வாகனத்தின் ஓட்டுநர் அந்தாரா காப்பியிலிருந்து ஸ்ரீ கோம்பாக் நோக்கி
பயணித்துக் கொண்டிருந்ததாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் நோர் அரிபின் முகமது நாசீர் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது சாலையில் குதிரை ஒன்றை அந்த
ஒட்டுநர் கண்டுள்ளார். அந்த குதிரையை தவிர்க்க இயலாத நிலையில்
அதனை மோதியுள்ளார் என்று அவர் சொன்னார்.

இந்த விபத்தில் அவருடன் அந்த ஃபோர்ட் ரேஞ்சர் வாகனத்தில் பயணம்
செய்த ஒரு பயணியும் காயமின்றித் தப்பினர்.எனினும் அக்குதிரை சம்பவ
இடத்திலேயே இறந்து விட்டது என நோர் அரிபின் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

அந்த குதிரை அப்பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது குறித்து தாங்கள்
விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், அந்த குதிரைக்கு
உரிமை கோரி யாரும் இதுவரை முன்வரவில்லை என்றார்.

விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் குதிரை லயம் இருப்பதாக எங்களுக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், விபத்தில் இறந்த குதிரை அந்த
லயத்திலிருந்து வந்ததா என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்றார்
அவர்.


Pengarang :