NATIONAL

பி2 பிரிவு மோட்டார் சைக்கிள் உரிமத்தை பி பிரிவுக்கு உயர்த்தும் பரிந்துரை இறுதிக் கட்டத்தில் உள்ளது

மலாக்கா, செப் 1 – பி2 பிரிவு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமத்தை பி பிரிவுக்கு  இயல்பாக உயர்த்தும்  திட்டம்  போக்குவரத்து அமைச்சு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே.) இறுதி கட்டப் பரிசீலனையில் உள்ளது.

இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி ஆகியோரிடமிருந்து   ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜே.பி.ஜே. துணைத் தலைமை இயக்குநர்  (திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள்) ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.

இந்த பரிந்துரை கொள்கையை உள்ளடக்கியுள்ளது.  இதனைச் செயல்படுத்துவதற்கு  முன்  போக்குவரத்து அமைச்சின் முடிவுக்காக ஜே.பி.ஜே. காத்திருக்கிறது. தேவைப்பட்டால், இந்த ஆண்டிற்குள் இது  அமைச்சரவைக்கு கொண்டு வரப்படும் என்று அவர் நேற்று  மலாக்கா மாநில அளவிலான மைலைசென்ஸ் திட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  மாநில பொதுப்பணி, உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்   டத்தோ ஹமீட் மைடின் குஞ்சு பஷீர் மற்றும் மலாக்கா ஜே.பி.ஜே. இயக்குனர் முகமது பிர்டாவுஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பி2 பிரிவுக்கான  மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமங்களை இயல்பாகவே பி பிரிவுக்கு மேம்படுத்த போக்குவரத்து அமைச்சுக்கு அகமது ஜாஹிட் கடந்த ஆகஸ்டு மாதம் பரிந்துரைத்ததாக   ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மைலைசென்ஸ் திட்டத்தின் கீழ் பி2 ஓட்டுநர் உரிமத்தைப் பெறத் தகுதியுள்ளத் தரப்பினர் அடுத்தாண்டில் அடையாளம் காணப்படுவர் என ஏடி ஃபாட்லி தெரிவித்தார்.

மாநில அளவில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடு நடத்தப்படும் இத்திட்டத்தின்  மூலம் பி40  பிரிவைச் சேர்ந்த 40,000 இளைஞர்கள்  பயனடைவர் என்றார் அவர்.


Pengarang :