NATIONAL

சம்பள பாக்கி தொடர்பில் மைஏர்லைன் நிறுவனப் பணியாளர்கள் போலீசில் புகார்

சிப்பாங், செப் 1- தங்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படாதது
தொடர்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் சேவையை நிறுத்தியுள்ள
மைஏர்லைன் விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஒரு பகுதியினர்
போலீசில் புகார் செய்துள்ளனர்.

அந்த விமான நிறுவனத்தின் 20 பணியாளர்கள் மலேசிய தொழிற்சங்க
காங்கிரசின் (எம்.டி.யு.சி.) தலைமைச் செயலாளர் கமாருள்ள பஹாருடின்
மன்சோரின் துணையுடன் இங்குள்ள சிப்பாங் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தில் இப்புகாரைச் செய்தனர்.

அந்த விமான நிறுவனம் கடந்த மே மாதம் முதல் சம்பளம்
வழங்காததோடு ஊழியர் சேமநிதி மற்றும் சொக்சோ எனப்படும் சமூக
பாதுகாப்பு நிறுவன சந்தாவையும் செலுத்தாதது தொடர்பில் இந்த புகார்
செய்யப்பட்டதாக் கமாருள் பஹாருடின் சொன்னார்.

நிதி நெருக்கடி காரணமாக கடந்த மாதம் 12ஆம் தேதியுடன் அந்த விமான
நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இதனால், கடந்தாண்டு
டிசம்பர் மாதம் முதல் அந்நிறுவனத்தில் வேலை செய்து வரும் 500
தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே, மைஏர்லைன் விமான நிறுவன ஊழியர்களிடமிருந்து புகார்
கிடைக்கப்பெற்றதை உறுதி செய்த சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப், இதன் தொடர்பில்
விசாரணை மேற்கொள்ளப்படும் அதே வேளையில் கோலாலம்பூர்
அனைத்துலக விமான நிலையம் போலீஸ் நிலையம் மற்றும் கோல
லங்காட் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் கவனத்திற்கும் இந்த புகார்
அனுப்பப்படும் என்றார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்கு ஏதுவாக
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் குறிப்பாக மனித வள அமைச்சின்
தலையீடு தேவைப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :