SELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டு விநியோகம்

ஷா ஆலம், செப் 1- இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் மெலாவத்தி தொகுதியைச்
சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு பெருநாள் கால ஷோம் ஷோப்பிங்
பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

பற்றுச் சீட்டு பெற்ற அனைவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோல
சிலாங்கூர் லோட்டஸ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான
பொருள்களை வாங்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வில் கோல
சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது மற்றும்
கெஅடிலான் கட்சியின் கோல சிலாங்கூர் தொகுதி தலைவர் தீபன்
சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருநாள் காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமையை அறிந்து
இந்த இலவச பற்றுச் சீட்டு திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசுக்கு
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

உண்மையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவி
சென்று சேர்வதை உறுதி செய்வதில் உறுதியாக இருந்த தொகுதி
தலைவர் தீபன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை தாங்கள் பெரிதும்
பாராட்டுவதாகவும் அவர் கூறினர்.

இந்த பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில்
100 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த
நிலையில் இவ்வாண்டு அதன் மதிப்பு 200 வெள்ளியாக உயர்த்தப்பட்டது.
இந்த ஷோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே
இலவச பற்றுச் சீட்டுகள் கிடைப்பதை தாங்கள் உறுதி செய்யவுள்ளதாகத்
தீபன் முன்னதாக கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் வசதியானவர்கள், பிங்காஸ் எனப்படும் நல்வாழ்வு
உதவித் திட்டம் மற்றும் எஸ்.எம்.யு.இ. மூத்த குடிமக்கள் பரிவுத் திட்ட
பயனாளிகள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும்
மேற்பட்டவர்களின் விண்ணப்பங்களை தாங்கள் நிராகரித்து விட்டதாகவும்
அவர் சொன்னார்.


Pengarang :