NATIONAL

2024 வரவு செலவு மீதான விவாதத்தை பிரதமர் இன்று முடித்து வைப்பார்

கோலாலம்பூர், நவ 2- நிதியமைச்சர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நிதி அமைச்சுக்கான  2024ஆம் ஆண்டு விநியோக மசோதா மீதான கொள்கை அளவிலான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் முடித்து வைக்கவுள்ளார்.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய  2024 விநியோக மசோதா மீதான கொள்கை அளவிலான விவாதம் எட்டு நாட்களுக்குப் பிறகு இன்றுடன்  முடிவுக்கு வரும்.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி  2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது அறிவிக்கப்பட்ட முற்போக்கான சம்பளக் கொள்கையை அமல்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து பிரதமர் மேலும் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்போக்கான ஊதிய முறை எவ்வாறு செயல்படும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய  நிறைவு அமர்வில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வணிகத் துறையை மேம்படுத்தவும், நிதி ஆதரவு மற்றும் விவேகமான செலவினங்களின் சமநிலையை அடைவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதமர் விளக்கவுள்ளார்.

‘பொருளாதார சீர்திருத்தம், மக்களை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளிலான 2024 வரவு செலவுத் திட்டம்  39,380 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கியுள்ளது.

மலேசிய வரலாற்றில்  தாக்கல் செய்யப்பட்ட மிக உயர்ந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட பட்ஜெட் இதுவாகும். இந்த படஜெட்டில் நிர்வாகச் செலவினங்களுக்காக 30,380 கோடி வெள்ளியும்   வளர்ச்சித் திட்டங்களுக்காக 9,000 கோடி வெள்ளியும்  எதிர்பாரா செலவுகளுக்கு  200 கோடி வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :