ANTARABANGSA

அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல் நடத்துவது போர்க் குற்றமாகும்- ஐ.நா. எச்சரிக்கை

நியுயார்க், நவ 2- காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது
இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல் போர்க் குற்றத்திற்கு
இணையானதாகும் என ஐ.நா.வின் மனித உரிமை அலுவலகம் கூறியது.

காஸாவிலுள்ள மிகப்பெரிய ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல்
வான் தாக்குதலை நடத்தி கடுமையான உயிருடற்சேதத்தையும் பொருள்
இழப்பையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த அமைப்பு இந்த
எச்சரிக்கையை விடுத்தது.

இந்த தாக்குதலை நாங்கள் அவசியமற்றதாகவும் போர்க்குற்றமாகவும்
கருதுகிறோம். என்று அது சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில்
குறிப்பிட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை அந்த முகாம் மீது வான் தாக்குதல்
நடத்தப்பட்டதை இஸ்ரேலிய தற்காப்பு படை உறுதிப்படுத்தியதைத்
தொடர்ந்து ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த முகாம் பகுதியில் விரிவான சுரங்கப் பாதையைக் கொண்டுள்ளதாக
கூறப்படும் ஹமாஸ் பேராளிகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்
நடத்தப்பட்டதாக அது தெரிவித்தது.

ஜபாலியாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டு தொகுதி மீது போர்
விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் ஹமாஸ்
பேராளிகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காஸாவிலுள்ள ஜபாலியா முகாம் மீது கடந்த செவ்வாய் மற்றும் புதன்
கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 195 பேர்
கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் தெரிவித்தது.

கட்டிட இடிபாடுகளில் 120 பேர் வரை சிக்கிக்கொண்டுள்ள வேளையில்
மேலும் 777 பேரைக் காணவில்லை என்றும் அது கூறியது.


Pengarang :