SELANGOR

உலு சிலாங்கூர் தொகுதியில் மடாணி தீபாவளி  உபசரிப்பு- 500 பேர் கலந்து சிறப்பித்தனர்

உலு சிலாங்கூர், நவ 20 – உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் ஏற்பாட்டில் மடாணி தீபாவளி பொது உபசரிப்பு கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அந்தாரா காப்பியில் உள்ள உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சேவை மையத்தில்  நடைபெற்ற இந்த உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாஃபி முகமது, ஓம்ஸ் ப. தியாகராஜன், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் உள்ளிட்டோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து  கொண்டனர்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் மூவினங்களையும் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இடம் பெற்ற கொம்பாங், சிங்க நடனம், உறுமி மேளம், மடாணி நடன மற்றும் மடாணி பாடல் உள்ளிட்ட படைப்புகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை பெரிதும் கவர்ந்தது.

அதோடு மட்டுமின்றி இங்கு நடத்தப்பட வாண வேடிக்கைகளை  வருகையாளர்கள் கண்டு ரசித்ததோடு அதிர்ஷ்டக் குலுக்கில் கவர்ச்சிகரமான பரிசுகளை வெலவதற்குரிய வாய்ப்பினையும் பெற்றனர்.

இந்த உபசரிப்புக்கு பிரத்தியேகமாக அழைக்கபட்டிருந்த சிவானந்தா ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறார்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு தீபாவளி ரொக்க அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விருந்தில் கலந்து கொண்ட அனைத்துச் சிறார்களும் அன்பளிப்பை பெறும் வாய்ப்பினைப் பெற்றனர்.

மடாணி தீபாவளி கொண்டாட்டத்தையும் அந்த கொண்டாட்டத்தில் மூவின கலாசார படைப்புகளையும் படைக்கும் ஒரே தொகுதியாக உலு சிலாங்கூர் விளங்குகிறது என்று சத்திய பிரகாஷ் கூறினார்.

இந்த உபசரிப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இதன் வெற்றிக்கு பாடுபட்டவர்கள் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :