SELANGOR

1,700 யுனிசெல் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க மாநில அரசு வெ.2.3 கோடி செலவிட்டது

ஷா ஆலம், நவ 20 – கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் வழங்க மாநில அரசு 2 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிட்டதாக மந்திரி புசார் கூறினார்.

இந்த கல்விக் கூடத்தில்   படிப்பைத் தொடரும் மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியாகப் பல்வேறு உபகாரச் சம்பளத் திட்டங்கள் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் 64 விழுக்காட்டினர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் (பி40) என்பதை யுனிசெல் தரவு காட்டுகிறது.

மாணவர்களுக்கு உதவுவதற்காக உபகாரச் சம்பள மற்றும் கல்வி நன்கொடைத் திட்டங்களையும் யுனிசெல் கொண்டுள்ளது.

துணைவேந்தர் உபகாரச் சம்பளம், பிஸ்தாரி உபகாரச் சம்பளம், சுகாதார அறிவியல் பிஸ்தாரி உபகாரச் சம்பளம் மற்றும் யுனிசெல் அறக்கட்டளை மாணவர் நன்கொடை ஆகிய நிதித் திட்டங்கள் மூலம் மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மாணவர்களுக்கு உதவ யுனிசெல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து  பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷித் ஹரோன் எழுப்பிய  கேள்விக்கு அவர்  இவ்வாறு பதிலளித்தார்.

இது தவிர, அடிப்படைப் பல்கலைக்கழகக் கட்டண உதவித் (பாயு) திட்டத்தைத் தொடர மாநில அரசு 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகவும்  அமிருடின் கூறினார்.


Pengarang :